வடபத்ர சயனப் பெருமாள் கோவில் : செப்புத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வடபத்ர சயனப் பெருமாள் கோவில் : செப்புத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது !!!
ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ தலங்களில் சிறப்புடைய ஒன்றாகும் . இங்கு ஆதி கோவிலான வட பெருங் கோவிலுடையான் என்று சொல்லக் கூடிய வடபத்ரசாயி பெருமாள் கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4 ஆம் தேதி துவங்கியது.
உற்சவர் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
9 ம் திருநாளான 12 ஆம் தேதி பெருமாளின் திரு நட்சத்திரம் புரட்டாசி திருவோணம் முன்னிட்டு இன்று காலை பெரிய பெருமாள் செப்புத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு காலை 6.30 மணிக்கு செப்புத்தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா.... கோபாலா... என கோஷம் எழுப்பியவாறு திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். வேத கோஷ்டியினர் வேத பாராயணம் பாடியபடி முன் செல்ல தேர் நான்கு ரத வீதிகள் வழியாக நிலையம் வந்து சேர்த்தது.
செப்புத் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் செள.சக்கரை அம்மாள், ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன், கோவில் அலுவலர்கள் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
What's Your Reaction?






